மதுரை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் இன்று முதற்கட்ட பூமி பூஜை எல் அண்ட் டி நிறுவனத்தால் (Larsen & Toubro Limited) செய்யப்பட்டது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 2023ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்காமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில், 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கு என வகுப்பறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.1,624 கோடியாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்தச் ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.