சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை, இந்த உயர் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரும், முனைவருமான கிருஷ்ணா சிவுகுலா (எம்.டெக், 1970 Batch) வழங்கியுள்ளார்.
இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய நன்கொடை மூலம் சென்னை ஐஐடி பணிகளை மேலும் மேம்படுத்தும். சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவன கட்டிடம் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முனைவர் கிருஷ்ணா சிவுகுலா, அவரது மனைவி ஜெகதாம்பாள், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "55 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு பணக்காரர்களாக இருப்பவர்கள், தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை தருகின்றனர். மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்த நிதி பயன்படும்.
ஏழை குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, தலைசிறந்த படிப்பை ஐ.ஐ.டி வழங்கியது. சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் 12.50 ரூபாயில் படித்தேன். முன்பாக 5.10 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளேன். ஒரு நாள் காலை திடீரென யோசித்தேன். என் நிறுவனத்தில் எனது ஷேர், அதன் மதிப்பு ஆகியவற்றை வைத்து, தனித்துவமாக நிதி கொடுக்க நினைத்தேன். இப்போது அதிகமாக நிதி கொடுத்துள்ளேன்" எனக் கூறினார்.