சென்னை: சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் ரவீந்திர கெட்டு, இந்தியாவில் பைபர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (Fibre reinforced concrete – FRC) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அமல்படுத்துவதில் முன்னணியில் திகழ்ந்தவர்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பைபர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டில் அமைக்கப்பட்ட 500 கிமீ சுரங்கப்பாதைகளின் கட்டுமானப் பணிகளுக்காக குறைந்தது 30 ஆய்வகங்கள் FRC சோதனைக்கு அனுப்பி வைத்திருந்தன. இதே காலகட்டத்தில் சுமார் 19 மில்லியன் சதுர மீட்டர் அளவுக்கு தொழிற்சாலைகள், கிடங்குகள், சாலைகள், அடித்தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கான அடுக்குகள்-தரநிலைகள் உருவாக்கப்பட்டன.
கட்டுமானத் துறையில் தரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, ஆராய்ச்சி முதல் பயன்பாடு வரை புதிய முன்னேற்றங்களை அமல்படுத்தும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்தை எவ்வாறு புகுத்தலாம் என்பதில் பேராசிரியர் ரவீந்திர கெட்டு கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், ஜவுளி வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (textile reinforced concrete) மற்றும் கட்டுமானத்தின் நிலைத்தன்மை மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ரவீந்திர கெட்டு தற்போது பணியாற்றி வருகிறார். தரத்தை மேம்படுத்துதல், காலவிரயத்தைக் குறைத்தல், ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்தல், சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்தல், முன்கூட்டியே அல்லது முன்னதாகவே முடிக்கப்பட்ட கூறுகளுடன் கூடிய பெரிய கட்டுமானங்கள் அவரது புதிய திட்டங்களில் அடங்கும்.
இந்த நிலையில், ரைலம் (RILEM) என்று அழைக்கப்படும் கட்டுமான பொருட்கள், அமைப்புகள், கட்டமைப்புகளுக்கான ஆய்வகங்கள் மற்றும் நிபுணர்கள் அமைப்பின் சர்வதேச ஒன்றியத்தின் கெளரவ உறுப்பினர் என்ற உயரிய அங்கீகாரத்தை பேராசிரியர் ரவீந்திர கெட்டுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பதக்கங்களுடன் முதலமைச்சரிடம் வாழ்த்து பாராலிம்பிக் வீரர்கள்.. ரூ.5 கோடி காசோலையை வழங்கி பாராட்டு!
இது குறித்து பேராசிரியர் ரவீந்திர கெட்டு கூறுகையில், "கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளில் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ரைலம் அமைப்பு 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்பட்டது. உலக அளவில் வியாபித்திருந்தாலும், ஒரு நாடு அல்லது பிராந்தியத்துடன் இணைக்கப்படாத ஒரே சர்வதேச அமைப்பு இதுவாகும்.
கட்டுமான பொருட்கள், அமைப்புகள், கட்டமைப்புகள் தொடர்பான இலவச அணுகலையும் அறிவியல் அறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. அதேபோன்று கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சோதனை ஆய்வகங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட கட்டுமான நடைமுறை மற்றும் அறிவியலில் முன்னணியில் உள்ள நிபுணர்களின் ஒத்துழைப்பின் மூலம் இந்த அறிவை உலக அளவில் மாற்றவும், பயன்படுத்தவும் ஊக்குவிப்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும்.
இந்த சங்கத்திற்கு அளப்பரிய சேவைகளை வழங்கியவர்கள், புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ரைலம் கெளரவ உறுப்பினர் என்ற மிக உயர்ந்த விருதை வழங்குகிறது. அந்தவகையில் தற்போது எனக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. மேலும், ரைலம் பற்றிய எனது உணர்வுகளை பெருமை, உற்சாகம், சமவாய்ப்பு என மூன்று வார்த்தைகளில் விவரிக்கலாம்" என்று தெரிவித்தார்.