சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளது. அந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், 5.99 சதவிகித வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும்.
மேலும், பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (பிப்.29) நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை (மார்ச் 1) விசாரணை நடைபெறும் என்று ஒப்புதல் அளித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?