தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏ.சி.பி இளங்கோவனுக்கு எதிரான மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை! - ACP ELANGOVAN CASE

காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 10:57 AM IST

சென்னை: திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், தலைமையில் அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன் அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக எடுத்து, விசாரணை நடத்தினர். அப்போது, காவல் உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜராகியிருந்தார். இதனை அடுத்து, இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அக்.07ஆம் தேதி ஆணையம் பரிந்துரைத்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பின்பற்றப்படும் வழக்கமான நடை முறையே பின்பற்றப்பட்டதாக" கூறியிருந்தார்.

மேலும், "இது குறித்து உரிய விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்பு அளிக்காமல், தனக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும்" அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரேஸ் கிளப்பில் குளங்கள் அமைக்கும் பணியை நிறுத்த கோரிய வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த மனு நீதிபதிகள் பி.பி.பாலாஜி மற்றும் ஜி.அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சினேகா, "மனித உரிமைகள் ஆணையம் முன் ஆஜராகி மன்னிப்புக்கேட்ட பின்னரும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே, ஆணையத்தின் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து, காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details