சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ - க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சபாநாயகர் அப்பாவு அக்.18ம் தேதிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன்? - காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில், அப்பாவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு தடைகோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகர் யாரையும் குறிப்பிட்டு பேசிவில்லை. அதனால் அவதூறு வழக்காக கருத கூடாது என தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியின் உறுப்பினர்களை குறிப்பிட்டு சபாநாயகர் அப்பாவு பேசாத போது? எப்படி அவதூறாக கருத முடியும். அப்பாவு பேசிய போது அதிமுக ஆட்சியில் இருந்தது. ஏன் அப்போது அவதூறாக கருதி வழக்கு தொடரவில்லை?
ஒரு கட்சி உறுப்பினர்கள், மற்ற கட்சியினர் குறித்து பேசுவது தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, அப்பாவுவின் பேச்சு எந்த வகையில் அவதூறானது? என அதிமுக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்