சென்னை:சிறைக் கைதிகளைச் சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறைத்துறை டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கைதிகளைச் சந்திக்கும் வழக்கறிஞர்களின் வசதிக்காக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் மூலம் வழக்கறிஞர்கள் கைதிகளைச் சந்திக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வசதிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து தேவையான பரிந்துரைகளை மேற்கொள்ளவும் வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.