சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படாததை குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''கடந்த 2009-2024ம் ஆண்டு வரை தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச தொகுப்புடன் சேர்த்து பணமும் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலவச தொகுப்பு வழங்கும் திட்டத்தை 2009ல் தொடங்கி 2011 வரை வழங்கினார். பின்னர், ஆட்சி மாற்றத்திற்கு பின் ஜெயலலிதா 2013ல் 100 ரூபாய் பணமும் சேர்த்து வழங்கினார்.
தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி 2019ல் இலவச தொகுப்புடன் 1,000 ரூபாயும், கரோனா காலத்தில் 2,500 ரூபாயும் வழங்கினார். பின்னர், 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், 2 கோடியே 19 லட்சம் பயனாளர்களுக்கு 2,429 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - தவெக கொடுத்த அப்டேட்!
இந்நிலையில், 2025ம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி வழங்குவது பேருதவியாக இருக்கும். அதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு இலவச தொகுப்புடன் சேர்ந்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கொடுத்தால் மகிழ்ச்சி தான்
இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், பொங்கல் பண்டிகைக்கான இலவச தொகுப்புகள் (ஜன 09) முதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் முறையீடு செய்தார்.
முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் தங்களுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், பணம் வழங்குவது என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் ரொக்கம் வழங்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.