தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச மகளிர் தினம்: நீதித்துறையில் சாதித்த பெண்கள் கூறும் தாரக மந்திரம்! - Womens Day

International Womens Day: உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்கள் சாதிப்பதற்கு இங்கே நீதித்துறையும் விதிவிலக்கல்ல என ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் பெண் அரசு வழக்கறிஞர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்..

International Womens Day
சர்வதேச மகளிர் தினம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 11:37 AM IST

சென்னை: பெண்களின் சாதனை, கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துச் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் (International Womens Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சாதிப்பதற்குப் பெண்மை ஒரு தடையில்லை, தகுதியும் திறமையும் இருந்தால் போதும் என்பதை பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அதேபோல சாதிப்பதற்கு இங்கே நீதித்துறையும் விதிவிலக்கல்ல என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

மகளிர் தினம்:கடந்த 1908ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் தொழிலாளர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" கேட்டுப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

பெண்களுக்கான உரிமைகள் என மேடைகளில் பலர் பேசினாலும், "அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு" என்ற நிலமைதான் அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்தது. இந்த கொடுமைகளுக்கு எதிராக சுப்ரமணிய பாரதியார் மற்றும் பெரியார் போன்ற தலைவர்களின் அழுத்தத்தால் நிலமை சற்றே மாறத் தொடங்கினாலும், கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

நீதித்துறையில் கொடி கட்டிப் பறக்கும் பெண்கள்: கடந்த 1862ல் விக்டோரிய மகாராணியால் கட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பத்மிணி ஜேசுதுரை முதல் பெண் நீதிபதியாக 1986ஆம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். கடந்த 38 ஆண்டுகளில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு 13 பெண் நீதிபதிகள் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஜே.நிஷா பானு, நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த், நீதிபதி வி.பவானி சுப்பராயன், நீதிபதி ஆர்.ஹேமலதா, நீதிபதி பி.டி.ஆஷா, நீதிபதி ஆர்.என் மஞ்சுளா, நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, நீதிபதி எஸ்.ஶ்ரீமதி, நீதிபதி என்.மாலா, நீதிபதி எல்.விக்டோரியா கெளரி, நீதிபதி ஆர்.கலைமதி, நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி உள்ளிட்ட 12 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல கோவாவிற்கு (70 சதவிகிதம்) அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் 50 சதவிகிதம் பெண் நீதிபதிகள் மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய நீதிபதிகள் ஆவணம் தெரிவிக்கிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பெண் நீதிபதிகள் அதிகமாக நியமிக்கப்பட்டாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி விமலா.

நீதிபதி விமலா (ஓய்வு): "மற்ற மாநிலங்களை விடப் பெண் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல போராட்டங்களுக்கு பின் வழக்கறிஞர்களாகும் வழக்கறிஞர்கள் நீதியை பெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் 50 சதவிகிதம் பெண் நீதிபதிகள் நியமிக்கக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். உலக நாடுகள் சபை 2030ஆம் ஆண்டு பெண் தொழில் முனைவோர்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சியாக இருப்பார்கள் எனக் கணித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை சட்டம் வழங்கினாலும், அதை உறுதிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்" என தெரிவித்தார்.

கெளரி அசோகன் (ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர்):சட்டங்கள் இங்கே பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பெண் வழக்கறிஞர்களுக்குச் சட்டப் புரிதல்கள் இல்லாததால், சரியாகப் பயன்படுத்துவதில்லை. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் குற்றங்கள் அதிகரிப்பதால் சட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சமுதாய நோக்கம் கொண்ட வழக்குகளில் வழக்கறிஞர்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். துணிச்சலாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பெண்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகிறது. எதிர்காலத்தில் சமத்துவச் சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மறைக்கப்படுவதே, குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்ணைக் கவரும் தஞ்சை கண்ணாடி கலைப்பொருள்கள்.. அசத்தும் பெண் தொழில் முனைவோர்!

ABOUT THE AUTHOR

...view details