சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
சட்டக்கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லது என காட்டமாக தெரிவித்ததோடு, தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.