சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் வட சென்னையில் வருடத்தின் பாதி நாட்கள் காற்று மாசுவை ஏற்படுத்துவதாகவும், எண்ணூர்-மணலியில் செயல்படும் என்.சி.டி.பி.எஸ், என்.டி.இ.சி.எல், சி.பி.சி.எல், டி.பி.எல், எம்.பி.எல், எம்.எஃப்.எல் காரணமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அந்த விசாரணையில், 6 நிறுவனங்களும் தங்கள் வருட வருவாயில் 1 சதவிகிதத்தை மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என 2023-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது.