சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஒன்று கூடி பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இது தொடர்பாக முன் அனுமதி பெறாமல் ஒன்று கூடி மாலை அணிவித்ததாக, அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சிவில் சட்ட போராட்ட வழக்கு ரத்து: பொது சிவில் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக திமுக மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி மீது மதுரை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வேளாண் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், சென்னை - சேலம் எட்டு வழி சாலைத் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து,
மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக, தடையை மீறி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக மாவட்டச் செயலாளர் தளபதி மீது சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி தளபதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தளபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:முரசொலி அலுவலக விவகாரம்; முரசொலி அறக்கட்டளையின் மேல்முறையீட்டு விசாரணை தள்ளிவைப்பு!