சென்னை:சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறாக வழக்கு தொடர முடியாது. சபாநாயகரின் பேச்சு அதிமுக, பாபு முருகவேலுக்கு எதிரானதல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் 40 எம்.எல்.ஏ.க்கள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதற்கு அவர்களின் பெயரை சபாநாயகர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை.
புகார்தாரர் பாபு முருகவேல் தரப்பில், சபாநாயகரின் பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், புகார்தாரர், கட்சியில் சாதாரண உறுப்பினர் மட்டும் அல்ல, வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதனால் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை கடந்த 22 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது அவதூறு இல்லை என தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக இவ்வாறு சபாநாயகர் கூறுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாபு முருகவேல் வழக்கு தொடர அதிமுக தலைமை அதிகாரம் வழங்கவில்லை. வழக்கு தொடர அதிகாரம் அளிக்கும் குழுவில் இருந்த உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தற்போது அதிமுகவில் இல்லை. பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், அப்பாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.