சென்னை:வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி, தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும், அதில் 17 – 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.