சென்னை:வன விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கேரளா, கர்நாடகாவில் உள்ள மலைப் பிரதேசங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் வாகனங்கள் அதிகம் செல்வதாக கூறினார்.
மணலிக்கு தினசரி குறிப்பிட்ட அளவு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதைப் போல, உதகை மற்றும் கொடைக்கானலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறினார். மேலும், மண் தரப் பரிசோதனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மலைப் பிரதேசங்களில் உள்ள சாலைகள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டால் மலைப்பகுதி என்ன ஆகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மலைப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.