சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு, சிறுநீரக தானம் வழங்க முன்வந்தவர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல எனக் கூறி, சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்க உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு, மருத்துவமனை விண்ணப்பிக்கவில்லை.
இதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "மனித உடல் உறுப்புகள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில், உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் அல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்ய இந்த சட்டத்தில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதேநேரம், மாநில அளவிலான அனுமதியளிக்கும் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும்" என சுட்டிக் காட்டினார்.
மேலும், "உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை மருத்துவமனைகள் தான் அனுப்ப வேண்டும் என மாநில அளவிலான குழு வற்புறுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, தானம் பெறுபவரும், வழங்குபவரும் இணைந்து மாநில அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உடல் உறுப்பு தானம் வழங்குவதில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனை இல்லை என்றால், தானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய விண்ணப்பத்தை மாநில அளவிலான குழு நிராகரிக்கக் கூடாது. அன்பின் அடிப்படையில் தானம் வழங்குவது தொடர்பாக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும்.
உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதுடன் மாநில அளவிலான குழுவின் பணிகள் முடிவடைந்து விடவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க, உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவக் காப்பீடு செய்வதுடன், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:4 கோடி ரூபாய் விவகாரம்; சிபிசிஐடி சம்மனுக்கு ஆஜராகாத நயினார் நாகேந்திரன்.. வெளியான தகவல்!