சென்னை:மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவியிடம் வாக்கு வாதம் செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜ்க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மேட்டுப்பாளையம் நகர்மன்ற அலுவலகத்தில் ஆணையர் அமுதாவைச் சந்தித்தார். அப்போது, வார்டு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக, சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை ஒதுக்க, திட்ட மதிப்பீடு விவரம் கேட்டு 3 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அளித்திருந்ததாகவும், அந்த விவரம் தர ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? என ஆணையரிடம் அவர் கேட்டுள்ளார்.
ஆணையர் அமுதா அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுகவினர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். மேலும், கடிதத்தைத் திருப்பித் தருமாறு ஆணையரிடம் எம்.எல்.ஏ தரப்பினர் கேட்டுள்ளனர். தகவல் அறிந்து நகர்மன்ற தலைவரான மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் திமுகவினர் அங்கு வந்தனர்.
இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்குக் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நகராட்சி ஆணையர் அமுதா அறையை விட்டு கண் கலங்கியபடி வெளியேறினார். இது தொடர்பாக நகராட்சி ஆணையர் தரப்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.