தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு உரிமை உண்டு”.. உயர் நீதிமன்றம் அதிரடி! - coma husband property order - COMA HUSBAND PROPERTY ORDER

Madras High Court: கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு உரிமையுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் கோப்புப்படம்
நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 5:16 PM IST

சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சட்டத்தில் இடமில்லாததால் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனவும், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டால் சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

மேலும், அந்த உத்தரவில், ஏற்கனவே மருத்துவமனை சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனிச் செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சசிகலாவின் இரு குழந்தைகளும், சொத்துக்களை விற்க தாய்க்கு அனுமதி வழங்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என கண்ணீர் மல்க தெரிவித்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானதல்ல எனவும், அதற்கு நிதி தேவைப்படும் நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக் கூறுவது முறையற்றது எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன்படி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.

தொடர்ந்து, மனைவி சசிகலாவை, கணவர் சிவகுமாரின் பாதுகாவலராக நியமித்த நீதிபதிகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்க சசிகலாவுக்கு அனுமதியளித்தனர். அதில், 50 லட்சம் ரூபாயை சிவகுமாரின் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்யவும், அதில் இருந்து காலாண்டு வட்டியை எடுத்து பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:போக்சோ வழக்கில் கைதானவருக்கு அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details