சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரிய வழக்கும் ஒன்றல்ல என நினைப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், “அந்த வழக்குக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது. மேலும், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட மற்றும் 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி கடந்த 1976ஆம் ஆண்டில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்து இருக்கிறது.
அந்தப் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, “அரசு அதிகாரிகள் அரசைப் பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பர் என அச்சம் தெரிவித்தார். மேலும், அந்த பகுதியில் பேருந்து வசதியில்லை. மருத்துவமனைகள் இல்லை, கர்ப்பிணிகள் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளில் சுமந்து செல்கின்றனர் என தெரிவித்தார். இதையடுத்து, உண்மை தகவல்களை அறிக்கையாக அளிப்பதை உறுதி செய்ய நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.