தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மனு; ஏ.வி.ராஜுக்கு இடைக்காலத் தடை! - ஏவி ராஜூ

Koovathur Issue: அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஏ.வி.ராஜுவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.வி.ராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெங்கடாசலத்திற்கு எதிராக அவதூறு கருத்துகள் கூற இடைக்காலத் தடை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 1:17 PM IST

சென்னை:சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும் கருத்து தெரிவித்திருந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிராக, அதிமுக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென தங்களது பொதுச் செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளதாகவும், அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி.ராஜூ இதனை மறந்து, பெண்களுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கென்று பிரத்யேகமாக பெண்கள் ஆதரவு இருந்ததாகவும், ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. ராஜூவின் இந்த பேச்சால், தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நஷ்ட ஈடாக, 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமென வெங்கடாசலம் மனுவில் கோரிக்கை வைத்தார். மேலும், ராஜூவின் அவதூறு பேச்சை நீக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், மனுதாரர் வெங்கடாசலம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை விதித்தும், மனு குறித்து ஏ.வி.ராஜு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கூவத்தூர் விவகாரம்; ஏ.வி ராஜுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மனுத் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details