சென்னை: திருவள்ளூர் மாவட்டம், புதுராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முரளி என்ற விவசாயி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது.
இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆரம்ப சுகாதர நிலையம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால் தான் தன்னுடைய கணவர் உயிரிழந்ததாகக் கூறி, அவரின் மனைவி அருணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.