சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வீடியோ ஆதாரங்களுடன், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு தமிழக அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கனிமவளத்துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது வெறும் கண்துடைப்பு என்று அதிருப்தி தெரிவித்தனர். வழக்கறிஞர் புருஷோத்தமன் தரப்பில் காட்டப்பட்ட வீடியோவில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டு இருப்பது நிரூபணம் ஆகிறது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதை அனுமதித்தால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்றும், நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.