சென்னை:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்றும் வாதிட்டார்.
இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி, மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார்.