சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இன்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இது தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி வழங்கியதாகவும், ஆனால் அந்த நாட்களில் விசாரணை நடத்த இயலவில்லை என தெரிவித்தார்.