சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும், இன்று ஆஜராகும்படி நேற்றிரவு 8.41 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கிலோ அல்லது அமலாக்கத்துறை வழக்கிலோ தங்களது பெயர் இடம் பெறாத நிலையில், உள்நோக்கத்துடன் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச அமலாக்கத்துறை நினைப்பதாக கூறினார்.