சென்னை:மதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி, கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த வழக்கை கடந்த மார்ச் 7 அன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 28ஆம் தேதி கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் ஆணையம் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் விவரங்களைக் கேட்டு மார்ச் 21ம் தேதி அனுப்பிய கடிதம் மார்ச் 25ஆம் தேதி பெறப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் இல்லாத நிலையில், தங்களால் விளக்கம் அளிக்க முடியாது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதுமான நிர்வாகிகள் பட்டியல், வரவு செலவு விவரங்கள் ஆகியவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் விளக்கம் கேட்பதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.