சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பிக்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பளித்தது.
விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ்தாஸ்க்கு வழங்கிய தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சரணடைவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ். ராஜ்குமார், மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.