தமிழ்நாடு

tamil nadu

“கருணை அடிப்படையில் பெண்களுக்கு மட்டுமே வேலை என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” - உயர் நீதிமன்றம் கருத்து! - Madras High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 3:43 PM IST

Madras High Court: கருணை அடிப்படையில் பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற சமூக நலத்துறை அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வேலூரைச் சேர்ந்த அருணகிரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “வேலூர் மாவட்ட ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த தனது தந்தை ராமலிங்கம் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். அந்த மனு கடந்த 2015ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் அருணகிரிக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு நான் சமூக நலத்துறைக்குச் சென்ற போது அவர்கள், தந்தை உயிரிழந்து 15 ஆண்டுகளுக்குப் பின் கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறை அரசாணையின் படி பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என்று பதிலளித்தனர். இந்தப் பதிலானது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:சென்னையில் தனியார் மாலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! - Bomb Threat To Mall In Chennai

ABOUT THE AUTHOR

...view details