சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள், மீண்டும் தனி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.08) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
இதனிடையே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறித்து முறையீடு செய்தார். அப்போது, வழக்குகளின் ஆவணங்கள் தலைமை நீதிபதியிடம் உள்ளதாகவும், தலைமை நீதிபதியின் முடிவின் அடிப்படையில் விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என தனி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.