சென்னை:நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை நாய், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மலர்க் கொத்து வழங்கியது. அதையடுத்து, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சார்பாக, ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அறிவித்தார்.