சென்னை:தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில் தச்சு தொழில் பிரிவில் உதவியாளர்களாக பணியாற்றிய தேவராஜ், சுரேஷ் ஆகியோரை காதியின் பட்டு சேலை, சோப்பு, தேன் விற்பனை பிரிவுக்கும், விற்பனை பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கும் மாற்றி காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குனர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தேவராஜும், சுரேஷும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எழுதப்படிக்க தெரியாத தங்களால் விற்பனை பிரிவை கவனிக்க இயலாது எனவும், சென்னையில் தச்சு தொழில் பிரிவு செயல்படாவிட்டாலும், திருநெல்வேலி, பள்ளிகொண்டா, அரக்கோணம், கள்ளக்குறிச்சி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் செயல்படும் தச்சு தொழில் பிரிவுக்கு தங்களை மாற்றலாம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, "பள்ளிப்படிப்பு தகுதியைக் கூட பெறாத மனுதாரர்களை விற்பனை பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும், தச்சர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள், அப்பதவிகளிலேயே நீடிக்க முடியும் எனக் கூறி, இருவரையும் விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.