சென்னை:திருப்பூர், தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதிக்கு 14 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார். அங்கு வந்த சேதுபதி, காளிமுத்து ஆகிய இருவரும், ஆண் நண்பரை தாக்கி விட்டு, சிறுமியை தூக்கிச் சென்று அருகில் உள்ள சோளக்கொல்லையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சேதுபதி மற்றும் காளிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காளிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, காலதாமதமாக புகார் அளித்ததும், முதல் தகவல் அறிக்கையை தாமதமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் குற்றம் நடந்துள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு ஏதும் நடத்தாததும், பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப் பின் முரணான சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை விதிப்பது சரியாக இருக்காது எனவும், காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் கூறி, ஆயுள் தண்டனையை ரத்து செய்து, இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் - புதிய சட்டம் அமல்! - Neet Exam Paper leak issue