சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள், கோயில் குளங்கள், அருவிகள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
மேலும், கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும்போது பக்தர்கள் உயிரிழந்ததையும் குறிப்பிட்டு, சென்னையைச் சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர், கடந்த 2018-அம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை எனவும், தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.