தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள்....விநோத நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 3:30 PM IST

சென்னை:சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர், அக்டோபர் 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், நான்கு நாள்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன், அக்டோபர் 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த மாணவனின் தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல்துறையினர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேரைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக பிரிவு 103-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி, “கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்குவதை மறுத்து, குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகும் கல்லூரி மாணவர்களுக்கு, மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதால், அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார்”.

இதையும் படிங்க:மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

மேலும், குறுகிய காலத்திற்கு மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் எப்படியாவது நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிடும் என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் நீதிமன்றம் உருவாக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ள மாணவர்களின் பெற்றோரிடம் நேரில் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று (டிச.2) நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நான்கு மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் பணியாற்ற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாணவர்கள் ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து இது தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details