சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஒரு மாத காலம் விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.06) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய சீரியல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து அவரது சகோதரர் ஆட்டோ மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதத்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த தீர்ப்பை கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை, முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி துளசி தேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து 35 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், நன்னடத்தை, முதுமை மற்றும் உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மோகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டு என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.