சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மிகவும் பின்தங்கியுள்ள கல்வராயன் பகுதி மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.