சென்னை: சமூக வலைதள செயலியானஸ்னாப்சாட் மூலம் அறிமுகமான மைனர் பெண்ணை சுற்றுலா அழைத்துச் சென்றதாக போக்சோ சட்டத்தில் கீழ் கைதான இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஸ்னாப்சாட் செயலி மூலம் சேலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவருடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இருவரும் பழகிய நிலையில் வீட்டுக்கு தெரியாமல் சென்னைக்கு வந்த அந்த மைனர் பெண்ணை சுற்றுலா அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று சேலம் மாவட்ட போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த இளைஞர் 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து தமக்கு ஜாமீன் கோரி அந்த இளைஞர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'நட்பு ரீதியாக தான் அப்பெண்ணை சுற்றுலா அழைத்து சென்றதாகவும் எந்தவொரு பாலியல் தொந்தரவும் செய்யவில்லை' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 'நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் , தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 'போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஜாமீனை மறுக்க போதிய காரணங்கள் இல்லை. 15 ஆயிரம் ரூபாய்க்கான இருநபர் உத்திரவாதம் வழங்க வேண்டும். உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள காவல் நிலையத்தில் தினமும் மாலை கையெழுத்திட வேண்டும்.' என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.