சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசையைத் தூண்டி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நிறுவனம், சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் ரூசோ, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ஆவடி கிளை மேலாளர்கள் அருண்குமார் மற்றும் ஜெனோவா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமார், ஜெனோவா ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.