சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில், பிரிவு அதிகாரி பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு பட்டியலில் தங்களை சேர்க்காததை எதிர்த்து, இவர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அதிகாரிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். அதேபோல, வழக்கமான முறைப்படி பட்டம் பெற்றவர்கள், திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, தமிழக அரசின் அரசாணைகளை மேற்கோள் காட்டி, திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், ஏற்கனவே பிரிவு அதிகாரியாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை, அரசு, பொதுத்துறை, பல்கலைக்கழக வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என அறிவிப்பதால் ஏற்படும் பிரச்னையை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!