சென்னை:சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனால், ஏற்கனவே தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க:'தன்னிடம் சிகிச்சை பெற்ற குரங்கு குட்டியை பார்க்க வேண்டும்'; கால்நடை மருத்துவருக்கு அனுமதி அளித்த கோர்ட்!
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமைதியான முறையில் போராட்டம் நடத்த மட்டுமே நீதிமன்றம் முன்பு அனுமதி வழங்கியது. மேலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, நிறுவனத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.