தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம்; வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு! - சென்னை உயர்நீதிமன்றம்

Kilambakkam Bus Terminus: சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும் என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Madras High court
Madras High court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 2:13 PM IST

Updated : Feb 7, 2024, 7:40 PM IST

சென்னை:கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, YBM மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போக்குவரத்து ஆணையரின் புதிய கட்டுப்பாடு 20 ஆண்டுகால நடைமுறைக்கு எதிரானது என்றும், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் துவங்கிய போதும், இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதால், தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த ஜன.31ஆம் தேதி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, தென் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என்று கூறி, இது குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று (பிப்.7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிப்பது எனவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் பணிமனைகள் உள்ளதால், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கும் இடங்களில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்து நிரம்பி விடும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும் என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:புதிய தலைமைச் செயலக முறைகேடு விவகாரம்; மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Last Updated : Feb 7, 2024, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details