தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேஷ் தாஸ் பங்களாவில் மின் இணைப்பு துண்டிப்பு; பீலா வெங்கடேசன் பதிலளிக்க உத்தரவு! - Rajesh Das Bungalow power cut - RAJESH DAS BUNGALOW POWER CUT

Complaint on Beela venkatesan: தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மின் இணைப்பை துண்டித்துள்ளதாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அளித்துள்ள புகாருக்கு பதிலளிக்குமாறு பீலா வெங்கடேசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன், உயர்நீதிமன்றம் புகைப்படம்
ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன், உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 9:14 PM IST

சென்னை:பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு இன்று (மே.23) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேஷனும் தம்பதியர். இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் தாங்கள் வாங்கிய பங்களா வீட்டில் வசித்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால், பங்களாவிற்கு பீலா வெங்கடேஷ் காவலாளியை நியமித்துள்ளார். கடந்த மே 18ஆம் தேதி, தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியைத் தாக்கி வெளியேற்றியதாக, பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மேலும், தனது பெயரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பை துண்டிக்கும்படி, செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விவகாரத்து தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள பீலா வெங்கடேசன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அதிகாரிகளுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், பங்களாவுக்கான வீட்டுக் கடன் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார்.. ஐஏஎஸ் Vs ஐபிஎஸ் விவகாரத்தில் நடப்பது என்ன? - Beela Venkatesan Issue

ABOUT THE AUTHOR

...view details