சென்னை:சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை (அக் 21) தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (அக் 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கறிஞரின் புகார் தொடர்பாக காவல்துறையால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இதுபோன்ற கொலை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததாகவும், வழக்கை முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், இந்த தகவலை கூறிய பெண்ணுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், அதனாலேயே வழக்கறிஞரிடம் இந்த தகவலை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.