சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
அதேபோல, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகளின் இறுதி விசாரணைக்கு, இந்த மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் நாள் குறிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.8) மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த சூமோட்டோ வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், "உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரிக்க பிப்ரவரி 7ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த ஒப்புதலின் அடிப்படையில், இன்று (பிப்.08) பட்டியலிடப்பட்டுள்ள அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும்" என்று உத்தரவிட்டார்.
இதுமட்டுமல்லாது, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ஏற்கனவே அறிவித்தபடி, பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் ஹைதராபாத் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!