சென்னை:சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றியவர் ஹேமலதா. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால் 2009 ஜூன் முதல், 2015ஆம் ஆண்டு மார்ச் வரை அதிக ஊதியம் வழங்கியதாகக் கூறி, 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை திரும்ப வசூலிப்பது என 2017ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை ஆசிரியர் ஹேமலதா செலுத்தினார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின், 2020இல் தன்னிடம் தவறுதலாக ஊதியம் பிடிக்கப்பட்டதாக கூறி ஹேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்பக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.