சென்னை:ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ் மற்றும் பிற இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, ரூசோ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிறுவன இயக்குநர் ரூசோவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு (பிப்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அனைவரையும் சரி கட்டி விடுவதாகக் கூறி ரூசோ மோசடி செய்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு என்றும் வாதிட்டார். மேலும், அவர் ஜாமீனில் இருப்பதால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்றும், பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளிப்பதைத் தடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, ரூசோ தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இந்த இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, மூன்று நாட்களில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் அவ்வாறு சரணடையாவிடில், ரூசோவைக் கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25: என்னென்ன எதிர்பார்ப்புகள்?