சென்னை: இந்து முன்னணி அமைப்பின், இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி, சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:14 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்த விவகாரம்; அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்!
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கோயில் வாசலில், கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல் துறையினர் அகற்றியிருக்க வேண்டும். சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்குப் பதில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே மனுதாரர் பேசியிருக்கிறார் எனக் கூறி, கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.