தேனி: பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், நேற்று முன்தினம் (நவ.03) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், நடிகை கஸ்தூரி, பிராமணர் சமூகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சில கருத்துகளைப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் அவமதித்து விட்டதாகப் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
குறிப்பாக, தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கூறிய தனது கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும். தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: "பொய்யான காரணங்களை கூறி சமுதாயங்களை பிளவுபடுத்துகின்றனர்"-நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு
இதற்கிடையில், “தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், நான் தெலுங்கு மக்கள் என்று சொல்லவில்லை, பொதுவாக தெலுங்கு பேசுபவர்கள் என்று தான் சொன்னேன். தவறான தகவல்களை அனுப்பி அவதூறுகளைப் பரப்புவது திமுகவின் தொழில்நுட்பக் குழுவின் வேலை” என நடிகை கஸ்தூரி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா என்பவர் தலைமையில், சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் நேற்று (நவ.04) புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், “தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, தெலுங்கு மன்னர்கள் உருவப் படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கத் தவறும் பட்சத்தில் சாதி ரீதியான பாகுபாட்டை ஏற்படுத்த முயல்வதாக கஸ்தூரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்