மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாயுமண் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் திருச்சி மாவட்டம் முசிறி கிராமத்தில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மேலும் எனக்குச் சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், பப்பாளி, கொய்யா மற்றும் வாழை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
இந்த நிலையில் எங்களது கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளதால், விளைந்து விற்பனைக்குத் தயாராக இருந்த பலசெடிகளைக் கடித்துச் சேதப்படுத்தியது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தேன். இந்த மனு மீது ஆய்வு நடத்தி அறிக்கை தர தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வரை எந்த இழப்பீடும் வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில் குரங்களால் சேதப்படுத்தப்பட்ட எனது பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மனு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "குரங்குகள் ஏற்படுத்திய சேதத்தை நீதிமன்றத்தால் கண்டறிய முடியாது. இருப்பினும் சம்மந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை, வனத்துறை அலுவலர்கள் குரங்குகளால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்ய முடியும். ஆகவே, மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து குரங்குகளால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:இந்துக்கள் அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை..! மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!