தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டு கைதிகளின் நலன்.. அரசுக்கு உயர் நீதிமன்றம் அட்வைஸ்! - FOREIGN INMATES PUZHAL JAIL

வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக விதிகள் வகுப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 9:01 PM IST

சென்னை:வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக விதிகள் வகுப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'புழல் சிறையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன், 'வெளிநாட்டு சிறைக் கைதிகள் நலன் தொடர்பாக விதிகள் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்.' எனக் கோரினார்.

மேலும், 'வீடியோ கால் உள்ளிட்டவை தொடர்பாக உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, 'மனுதாரர் உள்ளிட்ட வெளிநாட்டு கைதிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் காலை உணவு வழங்கப்படுவதில்லை' என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், 'சிறையில் கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுவதாகவும், இது உறுதி செய்யப்படும்' எனவும் கூறினார்.

இதனையடுத்து, வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டனர்.

வெளிநாட்டு சிறைக் கைதிகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நமது நாடு குறித்து மதிப்பிடப்படும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details